உளவியல் புரிதல் அவசியம்

நம் வாழ்க்கையின் சில சமயங்களில் உடல் ரீதியான பிரச்சினைகள் மனரீதியான பிரச்சினைகளால் ஏற்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை. அதாவது உடலின் எங்காவது ஒரு பகுதியில் வலி இருக்கும். ஏதோ ஒரு தாக்கத்தின் காரணமாக இது ஏற்பட்டிருக்கும். இதற்காக மருத்துவரின் ஆலோசனைகளை நாடினால் சில பரிசோதனைகளை செய்ய சொல்வார். ஆனால் அதன் முடிவுகளில் எல்லாம் சரியாக தான் இருக்கிறது. எந்தவொரு உறுப்பிலும் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை என்று தெரியவரும். இப்படியான சூழலில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றை தான்.

நமக்கு ஏற்பட்டிருப்பது நோய் அல்ல. அது நம் பதட்டத்தின் ஊடாக ஏற்பட்டிருக்கும் ஒருவித பாதிப்பு. நாம் சரிசெய்ய வேண்டியது உடலை அல்ல. மனதை தான். நாம் சந்திக்க வேண்டியது பொது மருத்துவரையோ, உடல் உறுப்புகள் சார்ந்த நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவரையோ அல்ல. உடனடியாக அணுக வேண்டியது மனநல மருத்துவரை தான். நோய் என்பது நேரடியாக தெரியக்கூடிய பாதிப்பு. சளி ஒழுகும். காய்ச்சல் வரும். காயம் பட்டிருக்கும். ரத்தம் வரும். உடல் உறுப்புகளில் தெரியக்கூடிய பாதிப்பு இருக்கும். அதற்கான பரிசோதனைகள் செய்து பார்க்கையில் பாதிப்பு இருப்பதாக முடிவுகளில் தெளிவாக சுட்டிக் காட்டப்படும்.
இப்படியான சூழலில் தான் மருத்துவர், மருந்து, மாத்திரை, சிகிச்சை என அடுத்தடுத்த நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். இல்லையெனில் மனநல மருத்துவரின் ஆலோசனைகளின்படி செயல்பாடுகளை மேற்கொள்ளவோ, மருந்துகளையோ எடுத்துக் கொள்ளவோ வேண்டும். மூளையில் உள்ள நரம்புகள் தொடர்ச்சியாக இருக்கக் கூடியவை அல்ல. சிறு சிறு நரம்புகளை இணைக்கும் பகுதியாக வேதிப்பொருள் ஒன்று செயல்படுகிறது. இதுதான் ஏதோ ஒரு பாதிப்பு நமக்கு வந்துவிட்டதாக தவறுதலாக புரிந்து கொண்டு அதற்கான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
இந்த வேதிப்பொருளுக்கு நாம் சரியான பாடத்தை புகட்ட வேண்டும். நம் உடலில் பிரச்சினை ஏதும் இல்லை. நீங்கள் தவறாக புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்று உணர வைக்க வேண்டும். அதை செய்பவர்கள் தான் மனநல மருத்துவர்கள். இந்த அடிப்படை விஷயத்தை புரிந்து கொண்டு தேவைப்படும் நேரத்தில் மனநல மருத்துவர்களை அணுகுவதை மறந்துவிடக் கூடாது. இவை என் சொந்த அனுபவத்தில் இருந்து பெற்றுக் கொண்ட விஷயங்கள்.
Mageshbabu

முன்பு ஆசிரியராக சில காலம். தற்போது ஊடகவியலாளராக சில காலம். ஆனால் எப்போதும் எழுத்தின் காதலன். என் வாழ்வில் நான் கொண்டாட நினைக்கும், பகிர நினைக்கும் அனைத்தும் எழுத்துகளாக வெளியே வருகின்றன. இங்கே எழுத்துகளாக பரிணமிக்கும் சமூகத்தின் மீதான எனது பார்வையை மதிக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

2 Comments

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்

Previous Post Next Post