ரசனையின் உச்சம்


கிட்டதட்ட ஓராண்டிற்கும் மேல் தாமதமாக கண்டுகொண்ட வெப் சீரிஸ். NetFlix கணக்கு தொடங்கி அதிநவீன தொழில்நுட்பங்கள் சார்ந்த திரைப்படங்களை தேடிக் கொண்டிருந்த தருணம். எந்தவொரு படத்தின் மீது ஆர்வம் ஏற்படவில்லை. கணக்கு தொடங்கி பல நாட்கள் வெறுமனே கிடந்த எனது NetFlix கணக்கிற்கு புத்துயிர் ஊட்டியது Money Heist சீரிஸ். சிலமுறை சமூகவலைத்தள உரையாடல்களில் பார்த்திருக்கிறேன். பலரும் ஆர்வத்துடன் இந்த சீரிஸ் பற்றி கருத்துகளை பதிவிட்டிருக்கின்றனர். அந்த நினைவில் சீரிஸ் பார்க்கத் தொடங்கிய நான், அதன் வசீகர வலையில் சிக்கிக் கொண்டேன். முதல் பகுதியின் 13 எபிசோட்கள், இரண்டாம் பகுதியின் 9 எபிசோட்கள் என 21 எபிசோட்களை அதிவேகமாக பார்த்து முடித்தேன்.

என்னவொரு பரபரப்பான கதைக்களம். என்னை கொஞ்சம் கூட நகரவிடாமல் கட்டிப் போட்டுவிட்டது. இந்தக் கதையை பற்றி, கதாபாத்திரங்கள் பற்றி பேச நிறைய இருக்கிறது. அதனை மற்றொரு சமயத்தில் பார்ப்போம். இந்தக் கதையில் இடம்பெற்றிருந்த Salvador Dali முகமூடியும், Bello Ciao என்ற பாடலும் என்னை மிகவும் கவர்ந்தன. இவற்றை பற்றி இங்கே சொல்லியே ஆக வேண்டும். உலகம் முழுவதும் Money Heist சீரிஸ் பிரம்மாண்ட வெற்றி பெற்ற நிலையில், Dali முகமூடியை அணிந்து கொண்டு பல்வேறு இடங்களில் பல போராட்டங்களில், கொண்டாட்டங்களில் Bello Ciao பாடலை மக்கள் பாடியிருக்கிறார்கள். பெண் உரிமைக்கான போராட்டம், மனித உரிமைக்கான போராட்டம், மக்களின் திருவிழாக்கள், விருந்து நிகழ்ச்சிகள், கால்பந்து போட்டிகள் என பல இடங்களில் Dali முகமூடியின் பிரம்மாண்டத்தை பார்க்க முடிகிறது.
அதேபோல் Bello Ciao பாடல் ஒலிப்பதையும் நம்மால் கேட்க முடிகிறது. இதுவே Money Heist சீரிஸின் வெற்றிக்கு மிகச்சிறந்த உதாரணங்கள். இதில் Salvador Dali என்பவர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர். இவரது முகத்தையும், மீசையையும் வைத்து உருவாக்கப்பட்டது தான் Dali முகமூடி. Bella Ciao என்பது இத்தாலிய நாட்டுப்புற பாடல். 1940களில் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் இத்தாலியின் நெல் வயல்களில் அடிமைகளாக வேலை செய்து வந்த மக்கள், தங்களது விடுதலையை பற்றி கனவு காணும் பாடலாக இது அமைந்திருக்கிறது. உடல் களைப்பு தீர உழைக்கும் மக்கள் எப்போதும் ஏதேனும் ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருக்கின்றனர். அந்த வரிசையில் Bella Ciao உலக வரலாற்றில் தவிர்க்க முடியாத பாடல்.
பாசிஸ்டுகளுக்கு எதிராக சுதந்திரத்தை விரும்பிய மக்கள் தங்களது எதிர்ப்பை காட்டிய பாடல். கிட்டதட்ட 70 ஆண்டுகளுக்கு பின்னர் Bella Ciao பாடலை இந்த உலகம் மீண்டும் பாடத் தொடங்கியிருக்கிறது. அதுவும் Money Heist வெப் சீரிஸ் மூலமாக. இந்தப் பாடலுக்கு அடிமையாகி பலமுறை நான் ஒலித்துக் கேட்டிருக்கிறேன். எனது செல்போன் ரிங்டோனாகி அவ்வப்போது எனக்கு உத்வேகம் அளித்துக் கொண்டே இருக்கிறது. உலக ரசிகர்களைப் போன்று நானும் செப்டம்பர் 3ஆம் தேதிக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். Bella Ciao...
Mageshbabu

முன்பு ஆசிரியராக சில காலம். தற்போது ஊடகவியலாளராக சில காலம். ஆனால் எப்போதும் எழுத்தின் காதலன். என் வாழ்வில் நான் கொண்டாட நினைக்கும், பகிர நினைக்கும் அனைத்தும் எழுத்துகளாக வெளியே வருகின்றன. இங்கே எழுத்துகளாக பரிணமிக்கும் சமூகத்தின் மீதான எனது பார்வையை மதிக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

1 Comments

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்

Previous Post Next Post