எங்கள் கணித மேதைக்கு கண்ணீர் அஞ்சலி


புவனேஸ்வரன் ஆசிரியர் பெயரை கேட்டாலே அவரது கண்டிப்பும், மிக எளிமையாக கணிதத்தை எங்களுக்குள் விதைத்த நாட்களும் தான் நினைவிற்கு வருகின்றன. நன்றாக படிப்பவர், படிப்பு வராத மாணவர் என்றெல்லாம் பிரித்து பார்க்க மாட்டார். கணக்கில் தவறு செய்தாலோ, வேறு எதும் பிரச்சினைகளில் சிக்கினாலோ அடி வெளுத்து விடுவார். 


வகுப்பறையில் அவர் பிரம்பை கையாளும் விதம் மிகவும் சுவாரஸிமானது. விரல் நுனியில் அடித்து உடம்பெல்லாம் சுர்ரென்று அதிர வைக்கும் வித்தையை கையில் வைத்திருப்பார். அதற்கு “சீனி மிளகாய் அடி” என்று பட்டப்பெயர் வைத்து அழைத்த நாட்களும் உண்டு. 


அதேசமயம் கணிதப் பாடம் கடைநிலை மாணவர்களுக்கும் புரிய வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை காட்டுவார். 6, 7, 8 ஆகிய வகுப்புகளில் அவர் மீதான அச்சம் விடாமல் பின் தொடர்ந்தாலும், அவர் கணிதப் பாடம் சொல்லிக் கொடுக்கும் நாட்களுக்காக ஆவலுடன் காத்திருப்போம். 


9ஆம் வகுப்பு ”இ” பிரிவில் படிக்கும் போது முதல்முறை எனக்கு கணித ஆசிரியராக இருந்தார் என நினைவு. 1999ல் தொடங்கி சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேல் அவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. தனிப்பட்ட முறையில் எனக்கு உத்வேகம் ஊட்டியவர். 


சச்சின் டெண்டுல்கருக்கு கிரிக்கெட் விளையாடும் போது ”Nervous Nineties” என்ற பிரச்சினை அடிக்கடி வரும். கிட்டதட்ட 25 முறைக்கும் மேல் 90களில் அவுட் ஆகி வெளியேறி விடுவார். செஞ்சுரியை நெருங்கும் போது வரக்கூடிய ஒருவித பதற்றம். அதேபோல் 100ஐ நெருங்க முடியாமல் பலமுறை அவரிடம் திட்டு வாங்கிய, அடி வாங்கிய தருணங்கள் உண்டு. 


சிறிய தவறு என்றாலும் என்னை பெரிதும் கண்டிப்பார். கணிதம் எனக்குள் ஆழமாக விதைக்கப்பட முக்கிய காரணம் புவனேஸ்வரன் ஆசிரியர் தான். பின்னாளில் நான் மாணவர்களுக்கு கணிதப் பாடம் சொல்லிக் கொடுக்கும் போது, இவரை பலமுறை மேற்கோள் காட்டியிருக்கிறேன். அறிவியல் உலகில் கணித சூத்திரங்கள் எங்கெல்லாம் பயன்படுகின்றன என்பதை முதன்முதலில் எங்களுக்கு விளக்கியவர். இதையே எனது மாணவர்களிடமும் சொல்வதுண்டு. 


இங்கு கிரிக்கெட்டை பற்றி சொன்னதற்கு காரணம் உண்டு. புவனேஸ்வரன் ஆசிரியருக்கு கிரிக்கெட் மீது தீராத காதல். பள்ளி முடிந்தவுடன் மாணவர்கள் உடன் சேர்ந்து கொண்டு கிரிக்கெட் விளையாடுவார். வகுப்பறையிலேயே இந்தியா விளையாடிய போட்டிகள் குறித்து விரிவாக பேசுவார். 9ஆம் வகுப்பு படிக்கும் போது, எங்கள் வகுப்பறை ஜன்னலில் எட்டி பார்த்து இவரிடம் 10ஆம் வகுப்பு அண்ணன்கள் வந்து இந்தியாவின் வெற்றி, தோல்விகள் குறித்து கதை கதையாக சொல்லி வேதனைப்பட்டு சென்ற தருணங்கள் உண்டு. பின்னாளில் நான் சென்னை வந்த போது கூட, ஒரு கிரிக்கெட் போட்டி குறித்து தொலைபேசியில் பேசிய விஷயங்கள் நினைவில் இருக்கின்றன. 


2012ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடர் நடந்தது. அதில் வங்கதேசத்திற்கு எதிராக இந்தியா தோற்றிருந்த நேரம். அடுத்து பாகிஸ்தானுடன் ஆட வேண்டிய போட்டி வந்தது. இறுதி போட்டிக்கு தகுதி பெற மிக கடுமையாக போராட வேண்டிய நிலை. விராட் கோலி 183 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினாலும், டை பிரேக்கர் ரூல் காரணமாக இந்தியா பின்னடைவை சந்தித்தது. அன்றைய தினம் கல்லூரி முடிந்து அறைக்கு திரும்பிய போது, விராட் கோலியின் ரன் வேட்டை தொடங்கியிருந்தது. இதைப் பற்றி தான் ஆசிரியருடன் பேசியபடி நடந்து சென்றேன். ”இப்ப இவ்வளவு வேகமா ரன் அடிச்சு என்ன ஆகப் போகுது” எனக் கேட்டார்.


கிரிக்கெட் போட்டியில் நடந்த சாதக, பாதகங்களை அணு அணுவாக பேசக்கூடியவர். இவரிடம் பேசினாலே பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். ஏன் அப்படி நடந்தது என்பதன் பின்னணியை புரிந்து கொள்ள முடியும் என்பதற்காக சீனியர் மாணவர்கள் தேடித் தேடி வருவர். தேவியாக்குறிச்சி பள்ளியில் மாணவனாக மட்டுமின்றி, தலைவாசலில் அவரிடம் டியூசன் சென்றது, கல்லூரியில் படித்து கொண்டே எங்கள் ஊர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓய்வு நேரத்தில் பணியாற்றியது என அவருடனான பயணம் நீண்டது. என்னுடைய உயர்கல்வி பாதையில் நான் எடுத்த முடிவுகள் இன்றளவும் ஒருவித மனச் சோர்வை ஏற்படுத்தினாலும், அதை நேர்மறை சிந்தனையில் எடுத்து கொண்ட வெகுசிலரில் இவரும் ஒருவர். எப்படியாவது மேலே வந்துவிடலாம் என எனக்குள் உற்சாகம் ஊட்டிக் கொண்டே இருப்பார். கடைசியாக ஊடகத்தில் சேர்ந்திருக்கிறேன். எனக்கான பணி இதுதான் என்று அவரிடம் விளக்கிய போது, இந்த துறையும் சாதாரணமானது அல்ல. இதிலும் முன்னேற நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன என அறிவுறுத்துவார். எல்லா மாணவர்களையும் இவர் தட்டி கொடுத்து நம்பிக்கை கீற்றை விதைக்கும் தருணங்களை பார்ப்பதே அற்புதமானது.


வகுப்பறையில் மாணவர்களின் ஆசிரியராக மட்டுமின்றி, அரசு அளிக்கும் சிறப்பு பயிற்சியில் ஆசிரியர்களின் ஆசிரியராகவும் இருந்தார். முழு ஆண்டுத்தேர்வில் வினாத்தாள் வடிவமைப்பு விஷயங்களிலும் முக்கிய பங்காற்றி இருக்கிறார். நல்லாசிரியர் விருது பெற்று எங்களை எல்லாம் மகிழ்ச்சி கடலில் தத்தளிக்க செய்தவர். மாநில அளவில் கணிதப் புத்தகம் வடிவமைப்பதில் அரசிடம் இருந்து இவருக்கு தொடர்ச்சியாக அழைப்புகள் வருவதாகவும், ஆனால் நேரமில்லை என்றும் என்னிடம் கூறியிருக்கிறார். தலைவாசலில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டிலும் படித்த 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டியூஷன் நடத்தி ஒவ்வொருவரையும் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற செய்திருக்கிறார். 


கணிதம் வரவில்லை எனப் புலம்பும் மாணவர்களை இவரிடம் கொண்டு போய் விட்டு விட்டால் நிச்சயம் தேற்றி கொண்டு வந்துவிடுவார் என்ற சொல்லாடல் எங்கள் பகுதியில் இன்றளவும் இருக்கிறது. 


இவரிடம் கணிதப் பாடம் படித்தவர்கள், தொடர்ச்சியான வழிகாட்டுதலில் முன்னேறியவர்கள் ஏராளம். இவரது தாக்கம் பல்லாயிரக்கணக்கான மாணவர்களிடம் இன்றளவும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. எந்த பள்ளிக்கு, கல்லூரிக்கு, வேலைக்கு சென்றாலும் இவருடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருக்க வேண்டும் என்று பலரும் விரும்புவர். எங்கள் வாழ்வில் கணிதத்தையும், புவனேஸ்வரன் ஆசிரியரையும் பிரித்து பார்க்க முடியாது. அவரது தனிப்பட்ட ஆளுமையில் இருந்து பல விஷயங்களை உள்வாங்கி இருக்கிறேன். எனக்குள் இன்றளவும் எஞ்சியிருக்கும் கணித சூத்திரங்களும், அதன்மீது ஆர்வம் குறையாமல் இருப்பதற்கும் இவர் போட்ட விதை தான் காரணம். இவருடைய கணிதத் திறமையை இன்னும் பல ஆண்டுகள், பல தலைமுறையினர் பெற வேண்டிய வாய்ப்பை இழந்துவிட்டனர். இவரது வாழ்வின் கடைசி நொடி வரை கணிதம் ஆட்கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இனி நீங்கள் காட்டிய நல்வழியில் பயணிப்பது ஒன்றே எங்களுக்கான ஆறுதல்.


Mageshbabu

முன்பு ஆசிரியராக சில காலம். தற்போது ஊடகவியலாளராக சில காலம். ஆனால் எப்போதும் எழுத்தின் காதலன். என் வாழ்வில் நான் கொண்டாட நினைக்கும், பகிர நினைக்கும் அனைத்தும் எழுத்துகளாக வெளியே வருகின்றன. இங்கே எழுத்துகளாக பரிணமிக்கும் சமூகத்தின் மீதான எனது பார்வையை மதிக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்

Previous Post Next Post