80கள், 90களில் இவர்
ஒருவர் தான் அப்பகுதியின் பிரதான மருத்துவர். பெரிய ஆஸ்பத்திரிக்கு போகவும், மெடிக்கலில்
நேரடியாக சென்று மருந்து வாங்கவும் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்ட மாட்டார்கள். ”உடனே
கிருஷ்ணமூர்த்தி டாக்டரிடம் போங்க”. இந்த வரியை தான் பலரும் உச்சரிப்பர். மனித வாழ்வின்
கடைசி நொடி அடங்கியதை உறுதி செய்ய இவரை தான் அழைப்பர். கிருஷ்ணமூர்த்தி இறப்பிற்கு
வந்திருந்த முதியவர்கள் சிலர், இப்படி தான் பேசிக் கொண்டிருந்தனர். இவரது இழப்பு சின்னப்
பரூர் கிராமத்திற்கு மட்டுமின்றி சுற்றுவட்டார 11 கிராமங்களுக்கும் பேரிழப்பு தான்.
பேரக் குழந்தைகள் தாத்தா, பாட்டியிடம் கதை கேட்பர் என்ற சொல்லாடலை அடிக்கடி கேட்டிருப்போம். கிருஷ்ணமூர்த்தி தாத்தாவிடம் நானும் கதை கேட்டிருக்கிறேன். எங்கள் குடும்பத்தின் கதை. எங்கள் பூர்வீகம் கடந்து வந்த கதை. கிருஷ்ணமூர்த்தியின் அப்பா முத்துசாமி ரயில்வேயில் இருந்தவர். இவருக்கு சொந்த ஊர் புனல்வாசல். முத்துசாமியின் மனைவி அங்கம்மாள். இவரது சொந்த ஊர் தேவியாக்குறிச்சி.
கிருஷ்ணமூர்த்திக்கு
புனல்வாசலில் சித்தப்பாக்கள் இருந்தனர். ஆனால் காலப் போக்கில் அனைத்து தொடர்புகளும்
துண்டிக்கப்பட்டு விட்டன. மூத்த மகள் அரசிக்கு இரண்டரை வயது இருக்கும் போது புனல்வாசலில்
இருந்த உறவினர்கள், ஊர் மக்களும் மாறி மாறி தூக்கி வைத்து கொண்டாடியுள்ளனர். புனல்வாசல்
அப்போது பெரிதும் ஏழ்மையில் தவித்து வந்தது. ஊர் மக்கள் வாழ்வாதாரத்திற்காக சிரமத்தில்
தவித்து வந்தனர். இதனால் பலரும் வெளியூருக்கு குடியேறி போன கதைகள் உண்டு. அந்த வகையில்
கிருஷ்ணமூர்த்தியின் குடும்பம் ஆத்தூருக்கு வந்துவிட்டது. முத்துசாமி ரயில்வே வேலையில் இருந்ததால் வெவ்வேறு ஊர்களுக்கு மாற வேண்டிய கட்டாயம் வந்தது.
அப்படித் தான் சின்னசேலம், புக்கிரவாரி என கடைசியாக சின்னப் பரூர் வந்து சேர்ந்தனர்.
கிருஷ்ணமூர்த்திக்கு படிப்பில் மிகுந்த ஆர்வம் உண்டு. அதனால் சிரமம் பார்க்காமல் எதையும் செய்வார். இவர் 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் தான் மிகப்பெரிய ஹைலைட். அந்த காலத்திலேயே 500க்கு 410 மதிப்பெண்கள் வாங்கினார். சின்னப் பரூரில் இருந்து 8 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று விருத்தாச்சலத்தில் பள்ளியில் பி.யு.சி முதலாமாண்டு படித்தார். காமராஜர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் (1954 - 1963) நிறைய ஓராசிரியர் பள்ளிகளை திறந்து வைத்தார். அதில் எஸ்.எஸ்.எல்.சி படித்தவர்களை ஆசிரியர்களாக பணியில் அமர்த்தினர். இந்த வாய்ப்பு கிருஷ்ணமூர்த்திக்கு கிடைத்தது. அப்போது விஜயமாநகரில் 60 ரூபாய் சம்பளத்திற்கு பள்ளி ஆசிரியராக வேலைக்கு சேர்ந்தார். இந்த வேலை நன்றாக போய் கொண்டிருந்த நிலையில், சில ஆண்டுகள் கழித்து அரசு ஓர் உத்தரவு போட்டது. இரண்டு ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு வர வேண்டும் என்று அனைத்து ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம் செய்யும் முறையும் அமலுக்கு வந்தது. இதற்கிடையில் கிருஷ்ணமூர்த்திக்கு எம்.பி.பி.எஸ் படித்து டாக்டராக வேண்டும் என்ற ஆசை இருந்தது.
"ஆனால் குடும்பத்தின் பொருளாதார சூழல் தான் குழந்தையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதற்கு அன்று முதல் இன்று உதாரணங்கள் வரிசை கட்டி நிற்கின்றன."
எம்.பி.பி.எஸ் படிக்க
500 ரூபாய் பணம் கட்ட வேண்டும். ஆனால் முத்துசாமி தாத்தாவால் அந்த பணத்தை கட்ட முடியவில்லை.
இதனால் வருத்தத்தில் இருந்த கிருஷ்ணமூர்த்தி, மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து ஏதாவது
ஒரு படிப்பை படிக்க வேண்டும் என்று தீர்மானித்து கொண்டார். இந்த சூழலில் சுகாதார ஆய்வாளர்
படிப்பை பற்றி தெரிய வந்தது. இதுபற்றி பத்திரிகையில் விளம்பரம் செய்திருந்தனர். அதை
பார்த்து விண்ணப்பித்த கிருஷ்ணமூர்த்திக்கு 10வது நாளில் ஆர்டர் வந்தது. நீங்கள் வந்து
சுகாதார ஆய்வாளர் (Health Inspector) படிப்பில் சேரலாம். அதுவும் தமிழகத்தின் முன்னணி
கல்வி நிறுவனமாக இருக்கும் Madras Medical College-ல் சீட் கிடைத்தது. Sanitory
Inspector Course என்ற ஓராண்டு படிப்பில் சேர்ந்தார். 100 ரூபாய் கட்டணம் செலுத்த
வேண்டும்.
இந்த படிப்பை படிக்கும்
போது MMCக்கு முன்பாக பச்சையப்பன் ஹாஸ்டலுக்கு அருகில் பேராசிரியர் ஒருவரது வீட்டில்
தங்கியிருந்தார். அங்கு அவர்களது குழந்தையை பார்த்து கொள்ளும் வேலை. அதற்கு மாதம்
10 ரூபாய் கொடுத்தார்கள். இதை வைத்து செலவுகளை சமாளித்து கொண்டார். இந்த படிப்பை முடித்ததும்
செங்கல்பட்டில் ஓராண்டு Field Training வாய்ப்பு கிடைத்தது. பின்னர் TNPSC தேர்வு எழுதி
அரசு வேலை வாங்கிவிட வேண்டும் என்று தீவிரமாக படித்தார். ஜெயலட்சுமி உடன் திருமணம்
ஆகி குழந்தைகள் பிறந்த பிறகு படித்து தேர்ச்சி பெற்று அரசு வேலை வாங்கியது தான் ஆச்சரியம்.
"எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் வந்துவிட்டன. இனிமேல் எப்படி படித்து தேர்ச்சி பெறுவது? என நான் சொல்லும் போதெல்லாம் தாத்தா சொல்வது மேற்சொன்ன பதிலை தான்."
அரசு வேலை கிடைத்தது.
சுகாதாரத்துறை ஆய்வாளராக பணி நியமனம் பெற்றார். இவரது பணிக் காலத்தில் மட்டும் அரசின்
நடவடிக்கையால் 24 நோய்களை ஒழித்திருக்கிறார்கள். அம்மை நோய் உட்பட. கிருஷ்ணமூர்த்தி
ஹெல்த் இன்ஸ்பெக்டர் பணியில் மிகவும் கண்டிப்பான நபராக சக அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும்
இருந்திருக்கிறார். அதேசமயம் நன்றாக வேலை செய்பவர்களை தட்டி கொடுக்க தயங்கியது இல்லை.
கிருஷ்ணமூர்த்தி பணி ஓய்வு பெற்ற நாள் எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது. குடும்பத்தினர்
அனைவரையும் வரவழைத்திருந்தார். சின்னப் பரூரில் உள்ள ஆரம்பப் பள்ளிக்கு முன்பாக மரத்தடியில்
நாற்காலிகள் போட்டு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் கலந்து கொண்ட ஊழியர்கள் பலரும்
கிருஷ்ணமூர்த்தியின் கண்டிப்பான செயல்பாட்டை சுட்டிக் காட்டினர். ஆனால் எல்லாரும் என்னை திட்டி
தீர்த்ததாக தாத்தா அடிக்கடி கூறுவார்.
சின்னப் பரூரில் காடு, இடம் வாங்கியவர் முத்துசாமி. வீடு கட்டியவர் கிருஷ்ணமூர்த்தி. அதுமட்டுமின்றி பரூரில் முதன் முதலில் வீட்டில் மின் விளக்கு ஏற்றியவர் தாத்தா தான். அதற்கு முன்பு வரை லாந்தல் விளக்கு மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. இவர் மின் விளக்கு போட்டதை பார்த்து தான் ஊரில் பலரும் மின்சார இணைப்பை கொண்டு வந்தனர். தாத்தாவின் ஆங்கிலப் புலமையை கண்டு நான் பலமுறை வியந்திருக்கிறேன். அவர் ஒவ்வொரு வார்த்தையை கூறி அர்த்தம் கேட்கும் போதெல்லாம் Dictionary-ல் தான் தேடி பார்த்து பதில் சொல்லுவேன். வேலை, சம்பளம், சொத்து, பிள்ளைகள் என ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார். மகாராஜா போல வாழ வேண்டும் என விரும்பினாரோ என்னவோ, தன்னுடைய பிள்ளைகளுக்கு அரசி, இளவரசி, பாண்டியன், ராஜா எனப் பெயர் சூட்டியிருக்கிறார்.
மனைவி ஜெயலட்சுமி இல்லாமல் 21 ஆண்டுகளை கழித்திருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. தனிமையில் பட்ட வேதனைகள் அவருக்கு மட்டுமே தெரியும். தாத்தாவை முதல்முறை பார்த்த ஞாபகம் எதுவும் என்னிடமில்லை. ஆனால் அவரை கடைசியாக பார்த்ததை என் வாழ்நாளில் மறக்க முடியாது. சில வாரங்களுக்கு முன்பு குடும்பத்துடன் சின்னப் பரூர் சென்றிருந்தேன். உடல் மெலிந்து அடையாளமே தெரியாமல் மாறியிருந்தார். உட்கார முடியாது. படுத்த படுக்கை தான். மருத்துவம் தெரிந்ததால் அடிக்கடி மருத்துவர்களை பார்த்து தொடர்ச்சியாக சிகிச்சைக்கு உட்படுத்தி கொண்டதால் வந்த வினையோ என்று எண்ணத் தோன்றியது. அவர் கைகளை இறுகப் பிடித்து கொண்டேன். ”வலி தாங்க முடியல” என்றார். ”நாம எவ்வளவோ பார்த்து விட்டோம். தைரியமாக இருங்க” என்றேன். அதன்பிறகு சென்னை திரும்பி பல நாட்கள் தாத்தாவின் நினைவுகள் வந்து வந்து போகும். இவரது இழப்பை இன்னும் கூட தள்ளி போட்டியிருக்கலாம். ஆனால் காலம் அதற்கான வாய்ப்பை அளிக்கவில்லை.
பிப்ரவரி 14, 2026 அன்று மாலை
மணிமுத்தாறு ஆற்றங்கரையில் நெருப்பின் கோரப் பசிக்கு தாத்தாவின் உடல் இரையானது. கரும்புகையாக
அவரது ஆன்மா காற்றில் கலக்க ஜெயலட்சுமியின் தனிமையை போக்க வானுலகம் நோக்கி புறப்பட்டார்.
ஆற்றங்கரையில் இருந்து எல்லோரும் மேலே ஏறிவிட கடைசியாக நின்று பார்த்து கொண்டிருந்தேன்.
தாத்தா… இனி உங்கள் உடலிலோ, மனதிலோ வலியை தாங்க வேண்டியிருக்காது. எல்லாவற்றையும் பார்த்து கொள்ள இனி பாட்டி இருக்கிறாள். எல்லா கவலைகளையும் மறந்து போய் சேருங்கள். வானில் உங்களை மற்றுமொரு நட்சத்திரமாய் நாங்கள் பார்த்து கொண்டிருப்போம்.


