ஷபீர் அகமது / Shabbir Ahmed


 

ஊடகத்துறைக்கு வந்து 8 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது. இந்த காலகட்டத்தில் நான் வியர்ந்து பார்த்த ஒருசில பத்திரிகையாளர்களில் மிகவும் முக்கியமானவர் இவர். உண்மையான ஊடகவியலாளர் எப்படி இருக்க வேண்டும்? மக்கள் பிரச்சினைகளை எப்படி அணுக வேண்டும்? மக்கள் மன்றத்தில் போட்டு உடைக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? மக்கள் பிரதிநிதிகளை நோக்கி கேட்க வேண்டிய கேள்விகள் என்னென்ன? எவையெல்லாம் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள்? என்பதை நொடிக்கு நொடி நினைவூட்டக் கூடியவர். சக ஊடகவியலாளர்கள் பலமுறை இவரை பற்றி பேசியதை கேட்டிருக்கிறேன். இவருடன் பழக்கம் கிடையாது. பெரிதாக அறிமுகமும் இல்லை. ஆனால் Times Now ஊடகத்தில் நேரலையில் வரும் போதெல்லாம் தவறாமல் பார்த்து விடுவேன். இவருடைய பழைய செய்தி சேகரிப்புகளையும் தேடித் தேடிப் பார்த்திருக்கிறேன். ஒருகட்டத்தில் அருகிலேயே பார்க்கும் வாய்ப்பு வந்தது. Tamil Samayam அலுவலகத்தின் மேல் தளத்தில் தான் Times Now அலுவலகம். அடிக்கடி எங்கள் தளத்திற்கு வந்து உரையாடி இருக்கிறார்.


அப்போதெல்லாம் பிரமிப்பும், என்ன பேசுவது, எதையாவது கேட்டு தெரிந்து கொண்டால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்துடன் நொடிகள் கடந்து சென்றுவிடும். ஒருமுறை எனக்கு ஆசானாகிப் போன சுவாரஸிய நிகழ்வும் அரங்கேறி இருக்கிறது. மூத்த ஊடகவியலாளர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்விற்கு எங்கள் செய்தி ஆசிரியர் ஸ்டீபன் ஏற்பாடு செய்திருந்தார். இது சற்றும் எதிர்பாராத ஒன்று. அந்த நிகழ்வின் முதல் நபரே, நான் வியந்து பார்த்த ஷபீர் அண்ணன். எங்களுக்காக நிறைய அனுபவங்களை லேப்டாப்பில் சேகரித்து எடுத்து வைத்து ஒவ்வொன்றாக விளக்கிக் காட்டி பிரமிப்பூட்டினார். நாங்கள் செய்வது Journalism அல்ல. ”இதுதான் உண்மையான Journalism” என்று பொட்டில் அடித்தாற் போல் காட்டினார். ஷபீர் அண்ணன் தனது வாழ்க்கை அனுபவங்களை பகிர்வதில் தொடங்கியது அந்த அற்புத நிகழ்வு. இந்த விஷயங்கள் அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கு தெரியும். ஒருசில யூ-டியூப் பேட்டிகளிலும் வந்திருக்கிறது. ஆனால் என் கண் முன்னே விரிந்தது, செவி வழி தகவலாக கேட்டு நெகிழ்ந்தது ஆகியவற்றை எழுதுவதில் தான் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.


ஊடகம் சார்ந்த படிப்பில் இருந்து கொஞ்சம் கூட சம்மதம் இல்லாத பலர், இந்த துறையை தூக்கி நிறுத்தி கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு ஷபீர் அண்ணன் மிகச்சிறந்த உதாரணம். சென்னையில் உள்ள நியூ காலேஜில் B.Com படிக்கும் போதே Student Activism விஷயத்தில் அதிகம் ஆர்வம் கொண்டிருந்தார். இங்கேயே எனக்குள் தீப்பொறி பற்றிக் கொண்டது. இத்தகைய போராட்டங்களில் மற்றும் நியாயம் கேட்கும் விஷயங்களில், நான் பங்கேற்றதில்லையே என்று பலமுறை ஏங்கியிருக்கிறேன். கல்லூரி படிப்பு முடித்து விட்டு Call Centre பணியில் ஈடுபட்டு பொருளாதாரத்தை படிப்படியாக முன்னேற்றலாம் என்று திட்டமிட்டிருக்கிறார். அப்போது SFI இயக்கத்தை சேர்ந்த தோழர் நாராயணன் சில கேள்விகளை முன்வைத்திருக்கிறார். ”படித்துவிட்டு என்ன செய்யப் போகிறாய்?” அதற்கு, Call Centre வேலைக்கு போகலாம் எனத் திட்டமிட்டுள்ளேன் என்று பதிலளித்துள்ளார். உனக்கு தான் Student Activism விஷயங்களில் ஆர்வமிருக்கிறதே.


நீ ஏன் பத்திரிகை துறைக்கு வரக்கூடாது என்று கேட்டு கையோடு அழைத்து சென்றிருக்கிறார். சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோட்டில் உள்ள தீக்கதிர் அலுவலகத்தை காண்பித்துள்ளார். இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் ஒரு பத்திரிகை. இங்கு நீங்கள் என்ன கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதை கற்கலாம் என விதை போட்டிருக்கிறார். முதல் வேலையே மார்க்கெட்டிங். விளம்பரம் வாங்கி தந்தால் கமிஷன் தருகிறோம். மற்றபடி சம்பளம் எதுவும் கிடையாது. மேலும் தீக்கதிர் பேப்பரை டீக்கடைகளில் போடும் வேலையும் வழங்கப்பட்டிருக்கிறது. கொஞ்சம் கலக்கம் அடைந்தாலும் புதிய அனுபவத்திற்காக மனதை தயார்படுத்தி கொண்டார். டீக்கடைகளில் தினத்தந்தி, தினமலர் பேப்பருக்கு போட்டியாக தீக்கதிர் நாளிதழின் தினசரி போஸ்டரையும் ஒட்டி அப்பகுதி மக்களை, சக பத்திரிகையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். காலையில் தீக்கதிர் பேப்பர் போட்டுவிட்டு 10 மணியளவில் அலுவலகம் சென்றுவிடுவார்.


சில மாதங்களுக்கு ஒப்பந்தம் போட்டு விளம்பரம் வழங்கும் அளவிற்கு ஒரு காண்ட்ராக்டை பிடித்து ஒட்டுமொத்த தீக்கதிர் அலுவலகத்தையும் திகைக்க வைத்த தருணமும் உண்டு. இருப்பினும் செய்தி சேகரித்து அதை தீக்கதிர் பேப்பரில் எப்படியாவது அச்சிட செய்ய வைக்க வேண்டுமென்ற கனவிலேயே பணிகளை தொடர்ந்திருக்கிறார். சுனாமி பேரலை தமிழகத்தை தாக்கிய தருணம். அப்போது தன்னிடமிருந்த சிறிய கேமராவை கொண்டு பேரலை பாதிப்புகளை படம் பிடித்துள்ளார். அவற்றை பிரிண்ட் அவுட் எடுத்து தீக்கதிர் அலுவலக வாசலில் பார்வைக்கு வைக்கப்பட்ட போது மிகவும் பெருமைப்பட்ட தருணமாக உணர்ந்தார். அப்போது தீக்கதிரின் நீதிராஜன் சொன்ன விஷயம் ஷபீருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களுக்கும் எக்காலத்திற்கும் சாலப் பொருந்தும். ”எந்தவொரு செய்தியாக இருந்தாலும் அது சாமானியனுக்கும் புரியும் வகையில் எளிமையானதாக (People Oriented Journalism) இருக்க வேண்டும். இல்லையெனில் அது ஒன்றுக்கு உதவாது” என்பது தான் அது. அதன்பிறகு தான் ஒரு செய்தியை எப்படி அணுகுவது, அதிலுள்ள சாராம்சத்தை எப்படி எடுப்பது, எப்படி எழுதுவது, எப்படி மக்களுக்கு புரிய வைப்பது உள்ளிட்ட விஷயங்களை கற்கத் தொடங்கினார்.


ஒரு செய்தியை வழங்குவதில் சிறந்த உதாரணமாக விளங்கிய தினத்தந்தி பேப்பரின் செயல்பாடுகள் ஷபீர் அண்ணாவை பெரிதும் ஈர்த்துள்ளது. ஏனெனில் எவ்வளவு பெரிய செய்தியாக இருந்தாலும் மிகவும் எளிமையாக சாமானியனுக்கு புரியும் வகையில் அளிப்பார்கள். இதுதான் அவர்களின் சக்சஸ் பார்முலா. Thanthi ஷபீர் அண்ணாவிற்கு மிகப்பெரிய Inspiration. அதன்பிறகு நண்பர் ஒருவர் மூலமாக Win TVல் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கிறது. பிரிண்ட்டில் இருந்து தொலைக்காட்சிக்கு மாறிவிட்டார். இங்கு கிடைச்ச அனுபவம் என்பது அவருடைய Golden moments. சிறந்த தலைமை, ஆர்வத்துடன் செயல்பட்ட சக நண்பர்கள் என பட்டை தீட்டிக் கொள்ள சிறந்த வாய்ப்பு கிடைத்தது. அங்கு தொலைக்காட்சிக்கு ஏற்ப செய்தி எழுதுவது, அதை சாமானியர்களுக்கு புரியும் வகையில் வழங்குவது என அடுத்தகட்ட கற்றலில் ஈடுபட்டார். ”நீதிக்காக” என்ற நிகழ்ச்சியின் மூலம் புதிய அனுபவமும் கிடைத்தது. இதையடுத்து நக்கீரனில் பணியாற்றும் வாய்ப்பு. செய்திகளில் மிகவும் ஆழமான பார்வை, அரசியல் பின்னணி, புதிய நபர்களின் தொடர்புகள் என பத்திரிகை அனுபவம் நீண்டது.


பின்னர் Raj TV, NDTV Hindu, Headlines Today, Times Now என தமிழில் இருந்து ஆங்கில ஊடகத்திற்கு மாறியிருக்கிறார். தமிழ் ஊடகத்தில் இருந்து ஆங்கில ஊடகத்திற்கு சென்று கோலோச்சியவர்கள் பெரிதாக யாரும் இல்லை. ஒருசில வெற்றிகரமான பத்திரிகையாளர்களில் ஷபீர் அண்ணா முன்னிலையில் இருப்பவர். ஆங்கில பத்திரிகைகளை வாய்விட்டு படித்தது, ஆங்கிலத்தில் சிந்திக்க பழகியது என படிப்படியாக ஊடக செயல்பாடுகளை மாற்றிக் கொண்டிருக்கிறார். ஷபீர் அண்ணா சொன்ன முக்கியமான விஷயங்களில் ஒன்று. தொழில்நுட்பம் என்பது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே தான் செல்லும். அதை பயன்படுத்த கற்றுக் கொண்டு Journalism Principles-ஐ விட்டுக் கொடுக்காமல் செய்தி சேகரிக்க கற்றுக் கொள்ள வேண்டும். வெறுமனே வாட்ஸ்-அப் செய்தியோ அல்லது சமூக வலைதள தகவல்களையோ வைத்து பதிவிடக் கூடாது. Contacts நிறைய வளர்த்துக் கொள்ள வேண்டும். அதன்வழி செய்திகளை புதிதாக பெற வேண்டும்.


தமிழ் ஊடகங்கள் Reporting என்பதில் இருந்து மாறி Stories செய்வதற்கு பெரிதும் பழகிக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். இது Source based Stories என்ற வகையில் பெரிதாக மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் மாற வேண்டும். அதை இளைய பத்திரிகையாளர்கள் கையிலெடுத்து செயல்படுத்த வேண்டும். அதேசமயம் Verify செய்யாமல் எந்தவொரு செய்தியையும் வழங்கக் கூடாது என்று தீர்மானமாக இருங்கள் எனக் கேட்டுக் கொண்டார். எப்போதும் அனுபவ பாடங்கள் நமக்குள் ஒருவித கிளர்ச்சியை ஏற்படுத்தும். உந்து சக்தியாக மாறும். அதன்வழி ஆல மரமாய் வளர்ந்து நிற்கும் போது உலகம் நம்மை கொண்டாடும். அன்றும் அப்படித்தான். நன்னிலத்தில் விதைக்கப்பட்டோம்.

Mageshbabu

முன்பு ஆசிரியராக சில காலம். தற்போது ஊடகவியலாளராக சில காலம். ஆனால் எப்போதும் எழுத்தின் காதலன். என் வாழ்வில் நான் கொண்டாட நினைக்கும், பகிர நினைக்கும் அனைத்தும் எழுத்துகளாக வெளியே வருகின்றன. இங்கே எழுத்துகளாக பரிணமிக்கும் சமூகத்தின் மீதான எனது பார்வையை மதிக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்

Previous Post Next Post