இந்த உலகம் உழைப்பால் தான் இந்தளவிற்கு முன்னேறி இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இத்தகைய உழைப்பை செலுத்திய தொழிலாளர் வர்க்கத்திற்கு அநீதி இழைக்கப்படுவது காலங்காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக குரல் கொடுக்க, கேள்வி எழுப்ப தனிநபரால் சாத்தியமில்லை. ஏனெனில் சக்தி வாய்ந்த அதிகார வர்க்கம் நம்மை அடக்கி ஒடுக்கி காணாமல் செய்துவிடும். எனவே உழைக்கும் கரங்கள் ஒன்றிணைய வேண்டும். உழைப்பாளர்கள் குரல் விண்ணை பிளக்க வேண்டும். அதற்கு தொழிற்சங்கம் என்பது எல்லா காலங்களிலும், அனைத்து தொழில்களிலும் அவசியம். அப்படி பத்திரிகை துறையில் பத்திரிகையாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் (Centre of Media Persons for Change - CMPC).
இதன் 12ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் மாவட்ட மைய நூலகத்தில் உள்ள தேவநேய பாவாணர் அரங்கில் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது மிகவும் மகிழ்ச்சியூட்டும் தருணமாக அமைந்தது. இந்த அமைப்புடன் எனது பயணம் 8 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. தொடக்க கால சந்தா செலுத்தியது, நலிந்த பத்திரிகையாளர்களுக்கு உதவுகையில், பத்திரிகையாளர் மன்ற தேர்தலின் போது கைகொடுத்தது என மிகவும் சொற்ப அளவிலான உதவிகளை மட்டும் என்னால் செய்ய முடிந்தது. இது அடுத்து வரும் காலங்களில் உத்வேகம் பெறும் என்பது எனது எண்ணம். நேற்று நடந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில், தோழர்கள் மணிகண்டன், ஹசீப், கேமரா மேன் சதீஷ், விஜி, செல்வகுமார், நிஷா, பக்ருதீன், விகடன் குழும முன்னாள் ஊழியர், ஓய்வுபெற்ற மூத்த பத்திரிகையாளர் தங்கராஜ், நித்தியானந்தன் என பலரும் அமைப்பை பற்றி, அமைப்பினால் பெற்ற பயன்கள் பற்றி, தொழிலாளர் நலச் சட்டங்கள் குறித்து, பத்திரிகையாளர்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
கடந்த 12 ஆண்டுகளாக CMPC முன்னெடுத்த விஷயங்கள், தீர்வு கண்ட விஷயங்கள், முன்னுதாரணமான செயல்பாடுகள் ஏராளம் என்று தான் சொல்ல வேண்டும். சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை அருகே உள்ள ஒற்றை பனை மரத்தின் கீழ் தொடங்கிய மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் பத்திரிகையாளர்கள் கூட்டம் படிப்படியாக வளர்ந்து அலுவலகம், அரங்கம், நீதி, வாழ்வாதாரத்திற்கான அச்சாணி என ஆல மரமாய் வளர்ச்சி பெற்றுள்ளது. ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளாக பணிபுரிந்தவர்களுக்கு Gratuity கிடைக்கச் செய்தது, திடீரென கதவை மூடிய காவேரி தொலைக்காட்சி நிறுவனத்திடம் இருந்து அதன் தொழிலாளர்களுக்கு நீதி பெற்றுத் தந்தது, புதிய தலைமுறை தொலைக்காட்சி திடீரென வெளியேற்றிய தொழிலாளருக்காக நீதிமன்றம் கதவுகளை தட்டி நியாயம் பெறச் செய்தது, புது யுகம் தொலைக்காட்சி தொழிலாளர் ஒருவரை வெளியேற்றிய போது அவருக்கு நீதிமன்றம் மூலம் உரிய நீதியை பெற்று தருவதற்கான முயற்சி, விகடன் நிறுவனத்தில் இருந்து 177 பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட போது அமைப்பு தானாக முன்வந்து நியாயம் பெறச் செய்வதற்கான முயற்சியில் இறங்கியது என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
திடீர் உடல்நலக்குறைவால் பத்திரிகையாளர்கள் மரணிக்கும் போதும், கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் வேலையிழந்து பத்திரிகையாளர்கள் தவித்த போதும் பலரிடம் இருந்து நிதி பெற்று உதவியது கவனிக்க வேண்டிய அம்சம். CMPC அமைப்பினால் வேலை பெற்றவர்கள், வாழ்வாதாரம் பெற்றவர்கள், நியாயம் பெற்றவர்கள் என ஆக்கப்பூர்வமான விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இந்த கூட்டத்தில் மிக முக்கியமான விஷயம் முன்வைக்கப்பட்டது. இதுவரை நீதிமன்ற கதவுகளை தட்டி நியாயம் பெற்றவர்கள் அனைவருக்கும் பக்கபலமாக நின்றது தொழிலாளர் நலச்சட்டங்கள். இந்த சட்டங்களால் தான் நீதிமன்றம் வரை சென்று நியாயம் பெற முடிந்தது. தற்போது இந்த சட்டங்களை நீர்த்து போகச் செய்யும் விஷயங்களில் அரசு ஈடுபட்டிருப்பது தான் அதிர்ச்சியூட்டுகிறது.
இத்தகைய முடிவை எடுக்கும் முன், சம்பந்தப்பட்ட தொழிலாளர் சங்கங்களை அழைத்து அரசு பேச வேண்டாமா? அவர்களின் ஆலோசனைகள், கோரிக்கைகளுக்கு செவி மடுக்க வேண்டாமா? இதெல்லாம் நம்மை வழிநடத்தக்கூடிய அரசுக்கு சொல்லியா தெரிய வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களுக்கு ஆபத்து நேர்ந்தால் நீட்டிக்கப்பட்ட பணி நேரம், திடீர் பணி நீக்கம், சலுகைகள் அளிக்காமல் விரட்டி அடிப்பது என அநீதிகள் தலைதூக்கும். உழைப்பால் இந்த உலகை மாற்றிய தொழிலாளர் வர்க்கத்திற்கு இதுவரை நடந்த அநீதிகள் போதாதா? மீண்டும் மீண்டும் அடி விழ வேண்டுமா? தொழிலாளர் வர்க்கம் விழித்தெழ, நமது மக்கள் நல்வாழ்வு வாழ, பத்திரிகையாளர்கள் திறம்பட செயல்பட உரிய சட்டங்கள் வேண்டும். அது காப்பாற்றப்பட வேண்டும். இவை அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை என்பதை மறந்துவிடாதீர்கள். ஆதலால் அனைவரும் கைகோர்த்து குரல் கொடுப்போம்.
Tags:
படிப்பினை
Nice 👍👌