தமிழ் அண்ணனும், மலையாள தங்கையும் / Amalu Sathyan




நம் தமிழ் உறவுகளுக்குள் குடும்பத்தை தாண்டி தாய்மை, சகோதரத்துவம், நட்பு உள்ளிட்ட பிணைப்புகள் ஏற்படுவது இயல்பான ஒன்று. இதற்கு மதம், நிறம், மொழி, தேசம் என்ற பேதங்கள் கிடையாது. எனவே எல்லை தாண்டி பல ஆயிரம் மைல்கள் பயணிக்கும். அப்படி கடவுளின் தேசத்தில் இருந்து எனக்கு கிடைத்த சகோதரத்துவ பிணைப்பு அற்புதமானது. பெங்களூருவில் உள்ள Times Internet நிறுவனத்தில் சக ஊழியர்களாக தொடங்கிய எங்களின் பயணமானது நட்பு, சகோதரத்துவம், தங்கை என்று படிப்படியாக நெருக்கத்தை கூட்டியது. மலையாள நண்பர்களை பொறுத்தவரை அவர்களுக்குள் உருவாகும் பிணைப்பு மிகவும் வலுவானது. அது கேரளா தாண்டி வேறு எந்த மாநிலமாக இருந்தாலும் சரி. நாடாக இருந்தாலும் சரி. அப்படித் தான் பெங்களூருவில் எனது அலுவலகத்தில் பணிபுரிந்த மலையாள நண்பர்களை பார்த்து வியந்திருக்கிறேன். அவ்வளவு ஒற்றுமை.


அவர்களில் ஒருவராக எனக்கு அறிமுகமானவர் Amalu Sathyan. டீ சாப்பிட, ஸ்நாக்ஸ் சாப்பிட, மதிய உணவு சாப்பிட, பணி முடிந்து வீட்டிற்கு திரும்புவது என பல்வேறு தருணங்களை ஒன்றாக கழிக்க நேர்ந்தது. முதல்முறை நாங்கள் வெளியே சென்றது Trinity Circle-ல் எங்கள் அலுவலகத்தின் அருகே உள்ள "0 KM Goa" என்ற ஓட்டல். இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்ததற்கு எங்கள் மேலாளர் Sharon Supriya-க்கு மிகுந்த நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். அதன்பிறகு அலுவலகத்தில் ஒவ்வொரு பண்டிகையையும் அலங்காரம், தின்பண்டம் என மிகவும் சிறப்பாக கொண்டாடினார்கள். அப்படி கிடைத்த நிமிடங்கள் என்னை தமிழ் அண்ணன் ஆகவும், அவரை மலையாள தங்கை ஆகவும் மாற்றியது. அதன்பிறகான எங்களின் உரையாடல் ஒரே குடும்பத்தை சேர்ந்த உடன்பிறப்புகளாகவே தொடர வைத்தது. அண்ணன் என்று என்னை தமிழில் அழைக்கும் போதும், Aniyathi என்று நான் மலையாளத்தில் அழைக்கும் போதும் நெகிழ்வூட்டும் கண நேரமாய், மனதை உருக்கும் நிகழ்வாய் மாறின.

அந்த சமயத்தில் வந்த Raksha Bandan நாளில் அவருக்கு ராக்கி கட்டியிருக்கிறேன். அன்பின் வெளிப்பாடு எந்த முறையில் இருந்தால் என்ன? பிறர் மனம் வாடாது செய்யும் எதுவும் தவறில்லை. எங்களின் ஒன்றிணைந்த பயணம் 8 மாதங்கள் மட்டுமே நீடித்தது. அதற்குள் மேல்படிப்பு, வேறொரு வேலை என Amalu Sathyan புறப்பட்டு விட்டாள். கடைசி நாளில் நான்கைந்து Gifts வாங்கி கை நிறைய அள்ளிக் கொடுத்து வழியனுப்பி வைத்ததை மறக்க முடியாது. Book செய்த Cab வந்தவுடன் இரண்டாவது மாடியில் இருந்து கீழே இறங்கி சென்றாள். நான் மேலே ஏறிச் சென்றேன். மூன்றாவது மாடியில் இருந்த என்னிடம் இருந்து கனத்த இதயத்துடன் விடை பெற்றுக் கொண்டாள். அதன்பிறகு எப்போதாவது Message, Call என மாதங்கள் ஓடின. என்னுடைய திருமணம், மகன் பிறந்தது, பெங்களூருவில் குடியேறியது என பல்வேறு காலகட்டங்களில் தகவல் பரிமாற்றம் நடந்துள்ளது.


அதன்பிறகு பல மாதங்கள் எங்கள் தொடர்பு துண்டிக்கப்பட்டது. எனது மலையாள நண்பர் Sreejith-இடம் கேட்டு அவ்வப்போது தெரிந்து கொள்வேன். 2021ஆம் ஆண்டின் இறுதியில் திடீரென ஒருநாள் புதிய எண்ணில் இருந்து போன் வந்தது. அப்போது ஸ்கூட்டரில் வீடு திரும்பி கொண்டிருந்தேன். அதன்பிறகு என்னால் போன் போட்டு பேச முடியவில்லை. பின்னர் Sreejith அழைத்து என்னிடம் விஷயத்தை கூறினார். Amalu Sathyan எனக்கு போன் செய்ய முயற்சிப்பதாய். உடனே நான் போன் போட்டேன். மறுமுனையில் Amalu Sathyan பேசினாள். அண்ணா எப்படி இருக்கு? என்ற மலையாள ஸ்லாங்கில் பேசி என்னை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தாள். எனக்கு திருமணம் ஆகப் போகிறது. நீங்கள் கட்டாயம் வர வேண்டும். ஒரு விஷயம் தெரியுமா? எனக்கு திருமணம் என்றதும் அழைக்க வேண்டிய முதல் ஆள் நீங்கள் தான் என்றாள். ஆச்சரியப்பட்டேன். இந்த எண்ணத்தை, அந்த பாசத்தை பல நூறாண்டுகள் கொண்டாடி தீர்க்க வேண்டும் போல தோன்றியது.

கடவுளின் தேசத்தில் இருந்து இப்படியொரு உறவா? என நெகிழ்ந்துவிட்டேன். இத்தனை நாட்கள் ஏன் தொடர்பு கொள்ளவில்லை என்று கேட்க, அதே கேள்வியை அவள் என்னிடம் கேட்டாள். குடும்ப வாழ்க்கையும், பணிச் சுமையும் எதையும் யோசிக்க விடவில்லை என்று மாறி, மாறி பகிர்ந்து கொண்டோம். நீங்கள் கட்டாயம் வர வேண்டும். உங்களுக்காக காத்திருப்பேன் என்று கட்டளையிடுவது போல் கூறினாள். இப்படியொரு நபரை யார் தான் தவற விடுவார்கள். உடனே ரயில் முன்பதிவு செய்துவிட்டேன். திருமண நாள் நெருங்கியது. முந்தைய நாள் இரவு Chennai Central ரயில் நிலையத்தில் இருந்து Alappuzha செல்லும் விரைவில் ரயிலில் ஏறினேன். Thirussur-ல் இறங்கி பேருந்து நிலையம் சென்றேன். இதற்கிடையில் பேருந்து குறித்த விவரங்களை Amalu Sathyan-இடம் போன் செய்து கேட்டுக் கொண்டேன்.


Thirussur-ல் மூன்று பேருந்து நிலையங்கள் இருப்பதாக தெரிந்தது. ஒருவழியாக Vadakke Bus Stand-க்கு சென்று அங்கிருந்து Chazhoor போகும் வழியில் Dubai Road நிறுத்தத்தில் இறங்கி கொண்டேன். பேருந்து நிறுத்தத்தில் இருந்து வெகு அருகில் தான் வீடு. அம்மா வரவேற்றார். வீட்டிற்குள் சென்றேன். அப்பா வரவேற்றார். சிறிது நேரம் அமர்ந்து ஓய்வெடுத்தேன். அதன்பின்னர் குளித்து சாப்பிட்டு என்னை தயார்படுத்திக் கொண்டேன். மேலே அலங்கார வேலைகளில் பிஸியாக இருந்த Amalu Sathyan என்னை அழைத்தாள். பட்டுப் புடவையில் நகைகள் அணிந்து மணப்பெண் கோலத்தில் தயாராக காட்சி அளித்தாள். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாள். அதற்குள் முகூர்த்த நேரத்திற்கு தயார் ஆனார்கள். ஒருவர் பின் ஒருவராக உறவினர்கள் வருகை புரிந்தார்கள். பின்னர் பெண்ணிற்கு குடும்ப உறுப்பினர்கள் ஆசிர்வாதம் செய்யும் நிகழ்வு அரங்கேறியது.

இதையடுத்து மணமேடைக்கு அழைத்து செல்லப்பட்டார். தாலி கட்டி முடித்தவுடன் சாப்பாடு. பின்னர் PhotoShoot என நேரம் நீண்டது. இதற்கிடையில் மேடையில் இருந்து கீழே இறங்க கிடைத்த சிறிய இடைவெளியிலும் என் அருகே வந்து அமர்ந்து கொண்டாள். தனியா இருக்கீயா அண்ணா? நான் சீக்கிரம் வந்துடுறேன். கொஞ்சம் பொறுத்துக்கோ என்றாள். அந்த இடத்தில் எனக்கு அவ்வளவு முக்கியத்துவமா? பெருமிதமாக உணர்ந்தேன். மணமகன், அவருடைய அம்மா, அப்பாவிடம் அறிமுகம் செய்து வைத்தாள் Amalu Sathyan. அடுத்தடுத்து நெகிழ்ந்த தருணம். எங்கிருந்து கிடைக்கும் இப்படியொரு ஓர் உறவு. அதன்பிறகு போட்டோ ஷூட் என்று வெளியே சென்றுவிட, நான் வீட்டின் வெளியே உறவினர்கள் பட்டாளத்தில் அமர்ந்திருந்தேன். திரும்பி வந்து எனக்காக வாங்கி வைத்திருந்த Kerala Special விஷயங்களை மறக்காமல் அண்ணனிடம் கொடுத்துவிடுங்கள் என்று பெற்றோரிடம் சொல்லிவிட்டு காரில் ஏறி புறப்பட்டாள். ஒட்டுமொத்த உறவுகளை கையசைத்து வழியனுப்ப நானும் அதில் ஓர் அங்கமானேன்.


பின்னர் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் சிறிது நேரம் உரையாடினேன். நான் வந்ததை மிகவும் மகிழ்ச்சியான விஷயமாக பகிர்ந்து கொண்டார்கள். எனக்காக Amalu Sathyan தேடித் தேடி வாங்கி வைத்திருந்த Kerala Special விஷயங்களை கையில் கொடுத்தார்கள். அப்பாவிடம் மீண்டும் எப்போது வெளிநாடு செல்கிறீர்கள் எனக் கேட்டேன். டிசம்பர் மாத இறுதி என்றார். Amalu Sathyan கணவர் Hyderabad-ல் பணிபுரிவதால் அங்கேயே செட்டில் ஆக முடிவு செய்திருப்பதாக அறிந்தேன். அம்மா, அப்பாவிடம் ஆசிர்வாதம் வாங்கி விடைபெற்றுக் கொண்டேன். Amalu Sathyan-காக Thirussur Travel மறக்க முடியாத அனுபவம். அள்ளி பருகிய பாசத்தின் ஊற்று. தங்கை பாசத்திற்காக ஏங்கி தவித்த காலமுண்டு. அப்போது எப்படியெல்லாம் அலைக்கழிக்கப் பட்டிருக்கிறேன் என்ற நினைவுகள் வந்து சென்றன. இப்படியொரு பக்குவமடைந்த தங்கையும், அவளின் பாசமும் கடவுளின் தேசம் எனக்கு அளித்துள்ள  வாழ்நாள் கொடை. எங்கள் அன்பு இன்னும் பல அத்தியாயங்கள் படைக்க காத்திருக்கிறது.

Mageshbabu

முன்பு ஆசிரியராக சில காலம். தற்போது ஊடகவியலாளராக சில காலம். ஆனால் எப்போதும் எழுத்தின் காதலன். என் வாழ்வில் நான் கொண்டாட நினைக்கும், பகிர நினைக்கும் அனைத்தும் எழுத்துகளாக வெளியே வருகின்றன. இங்கே எழுத்துகளாக பரிணமிக்கும் சமூகத்தின் மீதான எனது பார்வையை மதிக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்

Previous Post Next Post