இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே...
இந்த வரிகளும் கூடவே இளையராஜா இசையும். இப்படித்தான் அறிவழகனின் தொடக்க காலம் இருந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட படிப்பை தான் தேர்வு செய்து படிக்க வேண்டும் என்றில்லை. காலம் தனக்கான பாதையை காட்டும் என்ற நம்பிக்கையில் நடை போட்டிருக்கிறார். 10ஆம் வகுப்பு படித்து விட்டு மேல்நிலைக் கல்விக்குள் நுழைந்த தருணம். எம்.ஜி.ஆர் ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக அரங்கநாயகம் போட்ட உத்தரவு பெரும் அனலை கிளப்பியது. அதாவது First Group என்றால் கணக்கு சார்ந்தவை. இதைப் படித்தால் பொறியியல் தொடர்பான மேற்படிப்புகளில் மட்டும் தான் சேர முடியும்.
Second Group என்றால் தாவரவியல், விலங்கியல் சார்ந்தவை. இதைப் படித்தால் அறிவியல் சார்ந்த மேற்படிப்புகளில் மட்டுமே சேர முடியும் என்கிற நிலையை உண்டாக்கி விட்டார். இதில் Second Group எடுத்து படித்து விட்டு சூழலியல் மீதான ஈடுபாட்டால் B.Sc Botany-ஐ கையிலெடுத்தார். ஆனால் படித்து முடிக்கும் போது தான், அது தனக்கான உலகம் அல்ல என்று காலம் பதில் சொல்லியிருக்கிறது. வேறென்ன செய்ய... கணினி தான் இனிமேல் உலகம் என்ற நிலை 90களின் தொடக்கத்தில் அதிகமாக ஒலிக்கப்பட்டது.
இதனால் ஓராண்டு கணினி சார்ந்த படிப்பை முடித்தார். பின்னர் எழுதுவதில் உண்டான ஆர்வத்தால் ஓராண்டு Journalism சார்ந்த படிப்பை படித்தார். அப்போது தினமலர் ஏற்பாடு செய்திருந்த பயிற்சி பட்டறையில் நண்பருடன் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அங்கே செய்திகளை எழுதுவதில் தனக்கிருந்த பேரார்வத்தை வெளிப்படுத்தினார். இதைக் கண்ட தினமலர் நிர்வாகம் நீங்கள் தாராளமாக எங்களுடன் இணைந்து பணியாற்றலாம் என்று கூறி சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்றிருக்கிறது.
உடனே இந்த இளையராஜா பாடலை பிளே செய்யவும்.
காலம் கனிந்தது கதவுகள் திறந்தது...
ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது...
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே...
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே...
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம்...
அமைத்தேன் நான்...
இப்படித்தான் அறிவழகனும் நினைத்திருப்பார். காலம் கனிந்துவிட்டது. இவருக்கான பாதையில் அடியெடுத்தும் வைத்துவிட்டார். பிறகென்ன ஏணி போல் உச்சம் நோக்கி பயணம் மட்டுமே மிச்சம். ஆனால் தினமலரில் கொடுத்த ஊதியம் போதுமானதாக இல்லை. அந்த சமயத்தில் மக்கள் மத்தியில் பேரும், புகழும் பெற்று விளங்கிய கதிரவன் செய்தித்தாளில் சேரும் முடிவை எடுத்தார். ஆனால் அங்கு பிரச்சினை வேறு மாதிரி முன்வந்து நின்றது. சகித்து சகித்து பார்த்த அறிவழகன் ஒருகட்டத்தில் படாரென முடிவெடுத்து விட்டார். நண்பர்களுடன் இணைந்து நிறுவனத்தில் இருந்து வெளியேறினார்.
எல்லோரும் ஒரே மனநிலையில் இருந்ததால் இந்த ஒருமித்த முடிவு. இனிமேல் தான் பத்திரிகை அனுபவத்தில் பொற்காலம் பிறக்கப் போகிறது என்று அறிவழகன் அப்போது நினைத்திருக்க வாய்ப்பில்லை. தினமணியில் சேரும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு அவரது எடிட்டர் ஆர்.எம்.டி சம்மந்தம் மிகவும் கண்டிப்பான பேர்வழி. அதேசமயம் தலைசிறந்த ஆசான் என்று சொன்னால் மிகையல்ல. கஷ்டம் என்று வந்தால் கர்ணன். வேலை என்றால் அப்படியொரு சுறுசுறுப்பு. இந்த இடத்தில் தான் செய்தியை அழகுற எழுதுவது, பிறர் மனம் நோகாமல் எப்படி கையாளுவது, அரசியல் பார்வை, எந்தவொரு விஷயத்தையும் ஆழமாக உற்று நோக்குவது என பரந்துபட்ட அனுபவத்தை பெற்றுள்ளார். 21ஆம் நூற்றாண்டு பிறந்தது. One India Tamil-ம் பிறந்தது. இதற்காக நல்ல ஒரு டீமை தேடிக் கொண்டிருக்கையில் அறிவழகன் கிடைத்திருக்கிறார்.
இங்கு தான் ஒட்டுமொத்த தமிழ் இணைய செய்தி உலகையே புரட்டி போடும் அதிசயங்கள் பலவற்றை நிகழ்த்தி இருக்கிறார்கள். அதில் அறிவழகனுக்கு அளப்பறிய பங்குண்டு என்று சொன்னால் அது சாலப் பொருந்தும். முதலில் One India Tamil-ன் Font-ஐ சரியாக தேர்வு செய்தார். எந்தவொரு சிறு தகவலையும் செய்தியாக மாற்றும் தொனியை உருவாக்கினார். பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் பதவிகளின் பெயர்களை ஒழுங்குபடுத்தி இருக்கிறார். வளைகுடா வரை One India Tamil-ஐ கொண்டு சென்று புது சாதனை படைத்திருக்கிறார். தலைப்பில் பல ஜாலங்கள் நிகழ்த்தினார். Pageviews என்ற அமுதத்தை அள்ளி அள்ளி பருகி இருக்கிறார். தமிழ் இணைய செய்தி உலகில் இன்று வரை One India Tamil தலை நிமிர்ந்து நிற்க பலமாக அடித்தளம் போட்டுள்ளார். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இதில் இவரது டீமிற்கு பெரும் பங்குண்டு.
இளையராஜா பாட்டு போட சரியான நேரம். உடனே இதை பிளே செய்யுங்கள்.
பறவைகள் போல் நாம்
பறந்திட வேண்டும்
பனி மலை மேல் நாம்
மிதந்திட வேண்டும்
ஏதோ ஒரு போதை
மனம் கொண்டாடுதே...
One India Tamil-ல் அன்றைய ட்ரெண்டிங் செய்திகளை தாண்டி, Side Stories நிறைய செய்திருக்கிறார்கள். அதுவும் Exclusive ஆக அளிக்க தொடங்கினர். தொடக்கத்தில் Webdunia, 123 India, Chennai Online என ஒருசில தமிழ் செய்தி இணையதளங்கள் மட்டுமே இருந்துள்ளன. இவர்களுக்கு சிறந்த டீம் எதுவும் அமையவில்லை. இது One India Tamil இணையதளத்திற்கு அமைந்தது. வியூகம் வகுத்தனர். வெற்றிக்காக உழைத்தனர். முன்னிலையில் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருந்தனர். அதுவும் தொட முடியாத உயரத்தில். இன்றும் அப்படித்தான். இவ்வளவு பொக்கிஷங்களை, உழைப்பை, 21 ஆண்டுகள் One India Tamil-ல் பெற்ற அனுபவங்களை கொண்ட அறிவழகனை இவ்வளவு அருகில் பார்த்தது பெருமைக்குரிய தருணம்.
அப்படியே இளையராஜா பாட்டுடன் விடை பெறுவோம்.
இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்
”அறிவு” என்னும் கோபுரம் அங்கே நாம் காணுவோம்
வானம் உங்கள் கைகளில் உண்டு ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு
வானம் உங்கள் கைகளில் உண்டு ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு
நான் என்று எண்ணாமல் நாம் என்று உறவு கொள்ளனும்...
Wow . Very Nice Write-up
Thank you so much bro