இந்த விஷயத்தில் ’பூவுலகின் நண்பர்கள்’ சில பரிந்துரைகளை முன்வைக்க, அதற்கு தயாராவதாக தமிழக அரசின் பிரதிநிதிகள் உறுதி அளித்தனர். இருப்பினும் அவர்களிடம் தோன்றிய கலக்கத்தை மறைக்க இயலவில்லை. இது அனைவரின் பேச்சிலும் வெளிப்பட்டது. அரசுக்கு முன்நிற்கும் சவால் என்று பொருளாதார ஆய்வறிஞர் ஜெயரஞ்சன் ஒரு விஷயத்தை எழுப்பினார். அதாவது, சாமானியர்களுக்கு அத்தியாவசியமாக அளிக்க வேண்டியது மூன்று வேளை சோறு மற்றும் அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது.
இதைத் தான் பிரதானமாக கையிலெடுத்து அரசு செயல்பட்டு வருகிறது. இதனை கீழே வைத்து விட்டு சூழலியல் பிரச்சினைகளை கையிலெடுக்க வேண்டுமென்றால், அது எப்படி சாத்தியம்? மின்சார பொதுப் போக்குவரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர எவ்வளவு செலவாகும்? அதன் தொடர்ச்சி அரசுக்கு எத்தகைய சிரமங்களை ஏற்படுத்தும் தெரியுமா? இதற்கான விரிவான திட்டமிடல் இன்றி எதுவும் சாத்தியப்படாது என்ற வகையில் பேசினார்.
இவருடைய பேச்சு மனிதர்களுக்கு முக்கியம் சோறா? சூழலா? என்ற புதிய விவாதத்தை நோக்கி நம்மை இட்டுச் செல்வதை உணர முடிந்தது. அதேசமயம் சோறு தான் முக்கியம் என்று சுற்றியிருக்கும் சூழல் அழிந்து கொண்டிருப்பதை பார்த்து அலட்சியம் காட்டவும் முடியாது. இரண்டையும் இரண்டு கண்களாக பார்க்க வேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கிறது. ஆனால் ஒரு விஷயம். எந்த வகையில் அடி விழுந்தாலும், எவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டாலும் அது சாமானியர்கள் மேல் தான் முதலில் விழும் என்பது மட்டும் நிச்சயம். விழித்துக் கொள்ளுமா தமிழக அரசு? கரையேற்றுமா விளிம்பு நிலை மக்களை?